Thursday, September 23, 2010

கற்பனை மௌனம்

இந்த கற்பனை மௌனம் என்பது ஓரிடத்தில் நாம் சற்று அயர்ந்து அமர்ந்திருக்கும் போதும் கூட, மனம் சதா அலை பாய்ந்து கொண்டிருப்பதை அறிவீர்கள். அது ஏதாவது ஒரு விஷயத்தை கற்பனை செய்து கொண்டே இருக்கும். அது ஏற்கனவே நம் வாழ்வில் நடந்த ஏதாவது ஒரு சம்பவமாக இருக்கலாம், அல்லது ஒரு சம்பவத்தை நாமே நமக்கு விருப்பப்பட்டபடி கற்பனையில் ஓட விட்டு மகிழ்ந்து கொண்டிருப்பதாக இருக்கலாம், அல்லது கற்பனையில் தோன்றி உங்களை பயமுறுத்தும் ஒரு காட்சியாக இருக்கலாம். எண்ணங்களே இல்லாது கூட, மனத்திரையில் ஏதாவது பிம்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாக இருக்கலாம். அதாவது அப்போதைக்கு எந்த சம்பந்தமுமே இல்லாத ஒன்றாக இருப்பது கற்பனை மௌனம் என்பது. அந்த கணத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு கற்பனை காட்சியாக இருக்கலாம். இது ஏன்இப்படி தேவையேயில்லாமல் தோன்றுகிறது? அது மனதின் சுபாவம். மனதிற்கு இது தான் வேலை.அது எப்போதுமே உங்களை அலார்டாக வைத்திருக்க விரும்புகிறது. அது நினைக்கிறது " இந்த சமூகம் நீங்கள் நினைக்கிற மாதிரி நல்ல சமூகம் கிடையாது, உங்களைசுற்றியுள்ள நபர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் கிடையாது, எந்த நேரமும், எந்த விதத்திலாவது உங்களுக்கு ஆபத்து நிகழக்கூடும் எப்போதுமே நீங்கள் அலார்டாக இருக்க வேண்டும்.இப்படி 'நான்' அலார்டாக இருந்ததினாலேயே நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள்." இப்படி உங்கள் மனம் நினைக்கிறது. அதுவே உண்மையும் கூட! அதனாலேயே அது சதா ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. அது அதனுடைய தொழில். ஆனால் நாம் அந்த மனதின் கற்பனை காட்சிகளை கவனிக்க வேண்டும் என்பதில்லை. அதை கவனிப்பதாலும், அதனை பின் தொடர்வதாலும் நமக்கு சக்தி வீணாக விரயம் ஆகிறது. நமக்கு சக்தி குறைகிறது. நீங்கள் எப்போதாவது உங்கள் வேலைக்காரர்செய்து கொண்டிருக்கும் வேலையையே பொழுதெல்லாம் கவனித்துக்கொண்டு இருப்பீர்கள? அது உங்கள் வேலைக்காரருடைய டூட்டி. அவர் உங்களுடைய செக்யூரிடி. அவர் அவருடைய வேலையை கவனிக்கிறார். எப்போதாவது அவர் உங்களுக்கு கொடுக்கும் அலார்ட் விசிலை மட்டும் கவனித்தால் போதுமானது. இது போலத்தான் நீங்களும் உங்களுடைய மனதை துரத்திக்கொண்டே அலையாமல் ( இது உங்களை பாதுகாக்க ஒருவரிடம் செக்யூரிட்டி பொறுப்பை கொடுத்துவிட்டு, வீணாக அவரையே சந்தேகப்பட்டு அவரையே பொழுதெல்லாம் கவனித்துக்கொண்டி இருப்பதற்கு சமமானது .)நீங்கள் வேலைக்காரர் இல்லை. நீங்கள் முதலாளி. உங்களுக்கெனமுக்கியமான விஷயங்கள் இருக்கிறது நீங்கள் கவனித்துக்கொள்ள! அனைத்தையும் கவனித்து நிர்வகிக்க வேண்டியவர் நீங்கள்தான். உங்கள் செக்யூரிட்டி சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஆனால் என்ன செய்ய? மொத்த நிர்வாகத்தையும் செக்யூரிடியிடமே விட்டு பல காலம் ஆகிவிட்டதே என்கிறீர்களா? எவன் சோம்பேறியோ அவனே முழு நிர்வாகத்தையும் செக்யூரிடியிடம் விட்டு விட்டு , செக்யூரிட்டி சொல்லுவதை அப்படியே மேற்கொள்கிறான். ( இவரையெல்லாம் சொகுசாக சேற்றில் புரளும் பன்றிக்கு சமமாக கருதலாம் ) தன்னிடம் நிர்வாகத்தை எவன் வைத்திருக்கிறானோ அவன் விழிப்பானவன். நீங்கள் விழிப்பானவராக இருப்பதற்கே இந்த கற்பனை மௌனம் பற்றி பேசப்படுகிறது.நீங்கள் ஏதாவது வேலை செய்யும்போழுதோ, அல்லது சும்மா இருக்குபோழுதோ மனதை கவனியுங்கள். அங்கு ஏதாவது ஓடிக்கொண்டேயிருக்கும் . அந்த கற்பனை காட்சிகளை தொடர்ந்து கவனிப்பதோ, அந்த காட்சியில் லயித்து பின் தொடர்வதோ இனி விட்டு விடுங்கள்.அந்த காட்சிகளையோ, கற்பனை உருககளையோ கவனிக்காது விட்டுவிடுவீர்களானால் நாட்பட, நாட்பட அதன் ஆதிக்கம் குறைந்து போகும். அதற்க்கு உங்களுக்கு ஒரு விழிப்புணர்வு தேவை. அந்த காட்சிகளை தவிர்த்து வருதலே 'கற்பனை மௌனம்' . தன் முதலாளி தன் பேச்சை எடுத்துக் கொள்வதில்லையென தெரிந்தபின், அந்த செக்யூரிட்டி ஓயாமல் முதலாளியிடம் பேசுவதை குறைத்துக்கொள்கிறான். நீங்கள் ஏதாவது அதிகப்படியாக கவனத்தோடு செயல்புரியுங்கள், அல்லது மனசை கவனிக்காது சற்று சும்மா இருங்கள். இதுவும் உங்கள் பழக்கத்தினாலேயே வசப்படும். இதையும் உங்கள் மனதிற்கு, உங்கள் உடலிற்கு பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது தேவையில்லாமல் உங்கள் மனதை பின் தொடராதீர்கள்.

Wednesday, September 22, 2010

உடல் மௌனம்

நாம் இப்போது உடல் மௌனம் என்பது பற்றி பார்க்கலாம். நமது உடல் அசைவதாலேயே மனம் செயல்பட ஊக்குவிக்கப்படுகிறது. உடல் அசைவற்று நினறால், மனம் செயல் புரியும் வேகம் குறையும் . இந்த பழக்கம் தொடர்ந்தால், மனம் தேவையற்ற விஷயங்களை அசை போடுவது குறையும். உடலுக்கும் நல்ல ஒய்வு கிடைக்கும். இதை முதலில் சப்பணமிட்டு அமர்வதில் இருந்து துவங்கலாம். அதி காலை நேரத்தில் எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு உடலை நன்றாக நடந்து, ஓடி மூச்சிரைக்க உடல் பயிற்சி செய்து, உங்கள் உடலிலுள்ள திசுக்கள் அனைத்தையும் நன்றாக விழிக்க வைத்து , அனைத்தையும் உழைக்க வைத்து அவைகளுக்கு ஒய்வு தேவைப்படும் அளவுக்கு வேலை வாங்கி விட்டு பின் குளித்துவிட்டு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சப்பணமிட்டு முதுகை நிமிர்த்தி நேராக அமர்ந்து இடது கையை உள்ளங்கை மேல்நோக்கி விரித்து மடிமீது வைத்துக்கொள்ளவும். பின் வலது கையை மேல் நோக்கி விரித்து இடது கையின் மீது வைத்து பாதியளவு மூடிக்கொள்ளவும். உடலில் எந்த வித இறுக்கமும் இன்றி தளர்த்தி விடவும். நான்கு, ஐந்து முறை மூச்சை நன்றக ஆழமாக இழுத்து கடைசி மூச்சு வரை நன்றாக முழுவதுமாக வெளியே விட்டு பின் முழு அளவாக மூச்சை உள்ளே இழுத்து வெகு சீராக மெதுவாக எல்லா மூச்சையும் வெளியே விடவும். எவ்வளவு ஆழமாக, எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, அவ்வளவு நீளமாக பயிற்சி செய்யவும். உடலிலுள்ள திசுக்கள் நன்கு தளர்ச்சி யடையும் வரை இதை செய்யலாம். சுபாவமாக எப்படி முடிகிறதோ அப்படி செய்யலாம். கொஞ்சமும் வருத்திக்கொள்ள வேண்டாம். நன்றாக ஆழ்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால், மனதின் தேவையற்ற அலைச்சல் குறையும். உடலைஒரு ஒய்வு உணர்வோடு, ஒரு சுக உணர்வோடு இருத்தி வைத்து உங்கள் கவனத்தை உங்கள் வலது நாசியும், இடது நாசியும் கூடும் இடமான புருவ மத்தியில் நிறுத்தி, தொடர்ந்து வலது நாசி சுவாசமும், இடது நாசி சுவாசமும் சந்தித்து கொள்ளும் அந்த சுவாச உணர்விலேயே கவனம் கலையாது கவனித்து வாருங்கள். உங்கள் உடல் சிறிதும் அசைவற்று ( சுவாசத்தை தவிர ) இருக்கும் நேரமே உடல் மௌனம் என்பது. இந்த உடல் மௌனத்தை உங்களால் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் வைத்திருங்கள். ஆரம்ப காலங்களில் இது மிக கஷ்டமாக இருக்கும். இதுவரை நமது உடல் இதற்க்கு பழக்கப்படவில்லை என்பதால். ஒரு அரை மணி நேரம் தினமும் இப்பயிற்சி செய்து வந்தால், உடலுக்கு இது பழக்கமாகி சந்தோஷமாக இதில் ஈடுபட தொடக்கி விடும். உடலுக்கு இது ஒரு சுக உணர்ச்சி தானே! சீக்கிரம் உடல் இதை ஏற்று பழகிக்கொள்ளும். இந்த பயிற்சி செய்யும் ஒவ்வொரு முறையும் இதை சுகமாக உணர்ந்து செய்வது முக்கியம். அப்படி நீங்கள் செய்து வர ஒரே மாதத்தில் உடல் இதற்கு தயாராகி தானாக காலையில் எழுந்து அமர்ந்து கொள்ளும் விந்தையை காண்பீர்கள். கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் எப்போதும் இப்பயிற்சியை நீங்கள் துவங்கும் நேரம் ஒரே நேரமாக அமைய பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஒரு நாள் ஆறு மணிக்கு, ஒருநாள் ஏழு மணிக்கு , அல்லது ஐந்து மணிக்கு என நேரத்தை மாற்றாதீர்கள். சரியாக ஆறு பத்து என்றால், தினமும் அந்த ஆறு பத்தே என நேரத்தை பராமரித்து வாருங்கள். அப்பொழுதுதான் அது உங்கள் ஜீனில் சரியாக அமர்ந்து பழக்கப்படும். எது ஒன்றும் பழக்கப்படுவது கடிகார சுற்றுப்படியே அமைவதால் இது சாத்தியமாகிறது. இது உங்கள் உடலின் தகவமைப்பு.

மிக எளிய தத்துவம்

சகோதர சகோதரிகளே! ஆன்மிகம் என்பது மிக எளிய தத்துவம். இதை மதத்திலோ, கடவுளிலோ, தத்துவத்திலோ, சித்தாந்ததிலோ, வேதாந்ததிலோ தேடி அலைய வேண்டாம். நீதி நூல்களை தேடி அலைய வேண்டாம். சாஸ்திரங்களை தேடி அலைய வேண்டாம். எந்த போதனைகளையும் தேட வேண்டாம். எந்த போதகரையும் தேட வேண்டாம். ( அல்லது அதிலிருக்கும் உண்மையை மட்டும் அறிந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் ) ஆன்மீகத்தைப்பற்றிய மத நூல்கள் துவங்கி , துணுக்குகள் வரை எங்கும் பரந்து கிடக்கிறது. படிக்க, படிக்க, அது ஏதோ புண்ணியம், அவதாரம், தெய்வீகம் என குழப்பமே மேலிடுகிறது. நேரடியாக விஷயத்தை சொல்பவர்தான் இல்லை. இதன் நேரடியான விஷயம் என்னவெனில் - மனமானது சதா அலைந்து கொண்டேயிருப்பதால் ஆழ்ந்த மெய்ப்பொருளை நாம் அறிய முடிவதில்லை. மனதின் சலனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து சலனமற்ற புள்ளியில் நிறுத்தினால், மெய்ப்பொருள் விழிக்கும். உடல் மௌனம், கற்பனை மௌனம், மொழி மௌனம், மன மௌனம், சுவாச மௌனம் இத்தகைய மௌனங்களை கடந்து, வெகு ஆழ்ந்த மௌனத்தையும் கடந்து , வெறும் கவன உணர்வோடு 'சும்மா' இருத்தலே ஆன்மீக நிலை என்பது. இதை நீங்கள் ஒரு முறை தீண்டி விட்டால், அனைத்து உண்மைகளும் உங்களுக்கு விளக்கமாகிவிடும். இதை அடைய எல்லா மனிதருக்கும் தகுதி உள்ளது.தகுதியில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஒபாமா தொடக்கி தெருவோர பிச்சைக்காரி வரைக்கும் அனைவரும் சமமே! பிரச்னை என்னவென்றால் உங்களால் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து அதை தேட முடியுமா? இது நமக்கு தேவையா? அதென்ன பெரிய 'ஆன்மிகம்'? உங்கள் தேடலுக்கும் , உங்கள் உடலின் பழக்க வழக்கத்துக்கும்இப்படி ஏற்படும் போராட்டம். இந்த போராட்டம் நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில், ஏன்? பிறவிக்கணக்கில் போராட்டம் தொடர்வதுண்டு. முயற்சி தொடர்ந்தால் தேடல் வெற்றி பெறும்.சோம்பல் மிகுந்தால் உடல், மன பழக்கம் வெற்றி பெறும். இந்த வாழ்வை முழுமையாக அறிந்து வாழ விருப்பம் இருந்தால் இது உங்களால் முடியும். 'அறிவு' உங்களுக்கு துணை புரிவதாக!

Tuesday, September 21, 2010

அறிமுகம்

சகல மானிட உயிர்களுக்கும் தெரிவிப்பது - ஏனைய, அனைத்து உயிர்களுக்கும் உகந்தது - நாம் நமது மூல 'அடி ஆதார' நிலையை அறிவது - அறிந்து அறிவை பேணுவது - இது விஷயமாக எழுதுவது.
அவ்வப்போது மானிட சமூகத்தின் வழியே மொழி, பண்பாடு, கலாசார ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஆங்காங்கே ஆன்மிகம் பூத்திருக்கிறது. ஒரு ரோஜா, ஒரு மல்லிகை, ஒரு தாமரை என அந்த 'அறிவு' அந்தந்த மண்ணுக்கும், அந்தந்த தாவரத்துக்கும், அந்தந்த சூழலுக்கும் ஏற்றவாறு பலவித வண்ணங்களில், பலவித வடிவங்களில், பலவித மணங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. இதில் அடிப்படை சத்தியம் 'மலர்வது' தானே அன்றி நிறமோ, வடிவோ, மணமோ அல்ல!. அந்த நிறத்தைக்காக்க, அல்லது அந்த வடிவைக்காக்க அல்லது அந்த மணத்தைக்காக்க என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுவே 'இறுதி' உண்மை எனவும் சாற்றிக்கொள்கின்றன.முற்றறிவு பெற்ற ஞானவான்களும், அனைவரும் முற்றறிவு பெற விருப்பம் பூண்டு உபதேசிக்கின்றனர்.அவர்களின் நடையுடை பாவனைகளில் அவர் சத்தியத்தை காக்கின்றாரா? அல்லது நிருவனத்தைக்காக்கின்றாரா? பாவம் இன்னும் இங்கு காத்துக்கொள்ள வேண்டியது எதுவும் அவருக்கிருக்கிறதா? அது அவரவர்க்கே வெளிச்சம். இனி நாம் எல்லா நிறங்களையும் விடுத்து, எல்லாவடிவங்களையும் விடுத்து, எல்லா மணங்களையும் விடுத்து மலர்ச்சி என்பது எப்படி? என்பதை மட்டும் காண முயல்வோம்.