இந்த பிரபஞ்சமே வெளி நோக்கிய சர்வ சுதந்திரத்துடன் விரிந்து, படர்ந்து, விகசித்தும், உள் நோக்கிய ஒரு கட்டுப்பாட்டுடனும், என 'ஒன்று'க்கு கட்டுப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த 'ஒன்று' இந்த ஜடபிரபஞ்சத்தில் உயிராக அரும்பி , சுயதேடலால் வளர்ச்சியுற்று மலர துடிக்கிறது. அதுவே அறிவு.
Wednesday, September 22, 2010
மிக எளிய தத்துவம்
சகோதர சகோதரிகளே! ஆன்மிகம் என்பது மிக எளிய தத்துவம். இதை மதத்திலோ, கடவுளிலோ, தத்துவத்திலோ, சித்தாந்ததிலோ, வேதாந்ததிலோ தேடி அலைய வேண்டாம். நீதி நூல்களை தேடி அலைய வேண்டாம். சாஸ்திரங்களை தேடி அலைய வேண்டாம். எந்த போதனைகளையும் தேட வேண்டாம். எந்த போதகரையும் தேட வேண்டாம். ( அல்லது அதிலிருக்கும் உண்மையை மட்டும் அறிந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள் ) ஆன்மீகத்தைப்பற்றிய மத நூல்கள் துவங்கி , துணுக்குகள் வரை எங்கும் பரந்து கிடக்கிறது. படிக்க, படிக்க, அது ஏதோ புண்ணியம், அவதாரம், தெய்வீகம் என குழப்பமே மேலிடுகிறது. நேரடியாக விஷயத்தை சொல்பவர்தான் இல்லை. இதன் நேரடியான விஷயம் என்னவெனில் - மனமானது சதா அலைந்து கொண்டேயிருப்பதால் ஆழ்ந்த மெய்ப்பொருளை நாம் அறிய முடிவதில்லை. மனதின் சலனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து சலனமற்ற புள்ளியில் நிறுத்தினால், மெய்ப்பொருள் விழிக்கும். உடல் மௌனம், கற்பனை மௌனம், மொழி மௌனம், மன மௌனம், சுவாச மௌனம் இத்தகைய மௌனங்களை கடந்து, வெகு ஆழ்ந்த மௌனத்தையும் கடந்து , வெறும் கவன உணர்வோடு 'சும்மா' இருத்தலே ஆன்மீக நிலை என்பது. இதை நீங்கள் ஒரு முறை தீண்டி விட்டால், அனைத்து உண்மைகளும் உங்களுக்கு விளக்கமாகிவிடும். இதை அடைய எல்லா மனிதருக்கும் தகுதி உள்ளது.தகுதியில் எந்தவித மாற்றமும் கிடையாது. ஒபாமா தொடக்கி தெருவோர பிச்சைக்காரி வரைக்கும் அனைவரும் சமமே! பிரச்னை என்னவென்றால் உங்களால் அவ்வளவு பொறுமையாக அமர்ந்து அதை தேட முடியுமா? இது நமக்கு தேவையா? அதென்ன பெரிய 'ஆன்மிகம்'? உங்கள் தேடலுக்கும் , உங்கள் உடலின் பழக்க வழக்கத்துக்கும்இப்படி ஏற்படும் போராட்டம். இந்த போராட்டம் நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில், ஏன்? பிறவிக்கணக்கில் போராட்டம் தொடர்வதுண்டு. முயற்சி தொடர்ந்தால் தேடல் வெற்றி பெறும்.சோம்பல் மிகுந்தால் உடல், மன பழக்கம் வெற்றி பெறும். இந்த வாழ்வை முழுமையாக அறிந்து வாழ விருப்பம் இருந்தால் இது உங்களால் முடியும். 'அறிவு' உங்களுக்கு துணை புரிவதாக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment